யாப்பருங்கலக்காரிகை 21ம் பாடல் பாவுக்குரிய அடியும் ஓசையும் வரையருக்கிறது. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் மருட்பா எனப் பாக்கள் ஐவகைப்படும்.
யாப்பருங்கலக்காரிகை பாடல்கள் 23 – 27, வெண்பாவுக்கு ஆன விதிகளை வரையருக்கிறது. பாக்களில் வெண்பாவின் இலக்கணம் கட்டுப்பாடுகள் அதிகம் கொண்டது, இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது.
பாக்களில், வெண்பா செப்பலோசையை உடையதாக இருக்கும்.
- ஈற்றடி (கடைசி அடி) முச்சீரும், ஏனைய அடி நாற்சீரும் பெற்று வரும்.
- வெண்பா குறைந்தது இரண்டு அடிகளைக் கொண்டது.
- மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் என்பனவாகிய வெண்பாத் தளைகளையே பெற்று வரவேண்டும்.
- ஈற்றுச் சீர் ஓரசையாலோ, ஓரசையுடன் குற்றியலுகரமோ பெற்று முடிதல் வேண்டும்
யாப்பிலக்கண நெறிகளுக்கு இணையான இடம் சாரா இலக்கணம் பின்வருமாறு:
மேற்கண்ட இலக்கணங்கள் பொருந்த இரண்டடிகளில் வருவது – குறள்வெண்பா; மூன்றடிகளில் வருவது – சிந்தியல் வெண்பா (அடி எண்ணிக்கை குறைவாக இருப்பதால் குறள், சிந்தியல் என பெயர்ப்பெற்றது); நான்கடிகளில் வருவது – இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா (ஓசையில் உள்ள சிறு வேறுபாடுகளால் நேரிசை, இன்னிசை என பெயர்ப்பெற்றது); ஐந்தடி முதல் 12 அடி வரை அமைவது – பஃறொடை வெண்பா (பல அடிகள் தொடுத்து வருவதால் பஃறொடை என பெயர்ப்பெற்றது); 12 அடிகளுக்குமேல் பல அடிகளைப் பெற்று வருவது – கலிவெண்பா என வகைப்படுத்துவர்.
குறள் வெண்பா:
வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று இரண்டடியால் வருவது குறள் வெண்பா. திருக்குறள் குறள் வெண்பாவை சார்ந்தது
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக(திருக்குறள், 391)
இந்த வெண்பாவின் ஈற்றுச்சீர் <குறில்><குறில்> பெற்று மலர்ச்சீர் ஆகும்.
சிந்தியல் வெண்பா:
வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று மூன்றடியால் வரும் வெண்பா சிந்தியல் வெண்பா எனப்படும். குறுகிய அடி எண்ணிக்கையுடைய வெண்பா குறள்வெண்பா எனப்பட்டது போலவே, அடி எண்ணிக்கையில் சிறியதாக (சிற்றியல் – சிந்தியல்) உள்ள வெண்பா சிந்தியல் வெண்பா எனப் பெயர் பெற்றது. இது ‘நேரிசைச் சிந்தியல்’ & ‘இன்னிசைச் சிந்தியல்’ என இருவகைப்படும்.
நேரிசைச் சிந்தியல் வெண்பா:
மூன்றடியாய், இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று ஒருவிகற்பத்தாலோ, இரண்டு விகற்பத்தாலோ வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா. நேரிசை வெண்பாவைப் போல இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சீர் பெறுவதால் இது இப்பெயர் பெற்றது.
அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து செறிந்தார்க்குச் செவ்வன் உரைப்ப – செறிந்தார் சிறந்தமை ஆராய்ந்து கொண்டு (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)
மேற்காட்டிய வெண்பா மூன்றடியாய், இரண்டாமடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று ஒருவிகற்பத்தால் (அறி-செறி-சிற) வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா ஆகும்.
இன்னிசைச் சிந்தியல் வெண்பா:
மூன்றடியாய்த் தனிச்சொல் இன்றி ஒரு விகற்பத்தாலோ பலவிகற்பத்தாலோ வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஆகும். இன்னிசை வெண்பாப்போலத் தனிச்சொல் இன்றி வருவதால் இது இன்னிசைச் சிந்தியல் வெண்பா என்னும் பெயர் பெற்றது.
சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)
மேற்காட்டிய வெண்பா மூன்றடியாய்த் தனிச்சொல் இன்றிப் பலவிகற்பத்தால் (சுரை – யானை, கான) வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஆகும்.
நேரிசை வெண்பா:
வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடியாய், இரண்டாம் அடியின் இறுதிச்சீர் தனிச்சீராக வருவது நேரிசை வெண்பா. யாப்பருங்கலக்காரிகை ‘இருகுறள் நேரிசை வெண்பா’ & ‘ஆசிடை நேரிசை வெண்பா’ என இரண்டு வகைகளாகப் பிரிக்கிறது.
இருகுறள் நேரிசை வெண்பா:
- இரண்டு குறள் வெண்பாக்களை அடுத்தடுத்து நிறுத்தி, முதற் குறள்வெண்பாவின் இறுதியில் ஒரு தனிச்சொல் இட்டு, அதன் மூலம் அடியை நிரப்பி, இருகுறள் வெண்பாக்களையும் இணைப்பது இருகுறள் நேரிசை வெண்பா.
- அவ்வாறு இடப்பெறும் தனிச்சொல் முதற்குறள் வெண்பாவின் இறுதிச் சீருடன், அதாவது மூன்றாம் சீருடன் வெண்பாவுக்குரிய தளை (பிணைப்பு) பொருத்தம் உடையதாக இருத்தல் வேண்டும். மேலும் முதற் குறள் வெண்பாவுடன் எதுகைப் பொருத்தம் உடையதாகவும் இருத்தல் வேண்டும்.
- இப்பாடல் ஒரு விகற்பமாகவும் வரலாம் ; இரு விகற்பமாகவும் வரலாம். அதாவது நான்கடிகளும் ஒரே எதுகை அமைப்புப் பெற்று ஒருவிகற்பத்தால் வரலாம் ; அல்லது முன்னிரண்டடி ஓர் எதுகை அமைப்பும், பின்னிரண்டடி வேறோர் எதுகை அமைப்பும் பெற்று இருவிகற்பத்தாலும் வரலாம்.
அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே பெரிய வரைவயிரம் கொண்டு – தெரியின் கரிய வரைநிலையார் காய்ந்தால்என் செய்வார்பெரிய வரைவயிரம் கொண்டு
மேற்காட்டிய பாடலில் ‘தெரியின்’ என்ற தனிச்சொல்லை நீக்கிவிட்டுப் பார்த்தா. இரண்டு குறள்வெண்பாக்கள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது தெரியும். ‘கொண்டு’ என்னும் சீர் ‘காசு’ என்னும் வாய்பாட்டையுடையது. இரு குறள் வெண்பாக்களையும் ‘தெரியின்’ என்னும் தனிச்சொல் இணைக்கின்றது. ‘கொண்டு – தெரியின்’ என முதற்குறள் வெண்பாவுடன் தளைப் பொருத்தம் (மாமுன்நிரை – இயற்சீர் வெண்டளை) அமைகிறது. அரிய – பெரிய – தெரியின் என முதற்குறள் வெண்பாவுடன் தனிச்சொல் எதுகைப் பொருத்தமும் கொண்டுள்ளது. இவ்வாறு தனிச்சொல்லால் இணைக்கப்பட்டு நான்கடியும் ஒரேவிகற்பமாக (அரிய – பெரிய – கரிய – பெரிய) வருவதால் இப்பாடல் ஒருவிகற்பத்தால் வந்த இருகுறள் நேரிசை வெண்பா ஆகும்.
இயற்சீர் வெண்டளையின் இலக்கணம்:
ஆசிடை நேரிசை வெண்பா:
ஆசு = பற்றாசு; பொற்கொல்லர் நகைகளில் இணைப்புக்குப் பயன்படுத்தும் பொடி. இங்குச் சீர்களைத் தளை, ஓசைப் பொருத்தத்துடன் இணைக்கப் பயன்படுத்தும் ஒன்று அல்லது இரண்டு அசைகளை ‘ஆசு’ எனக் குறிப்பிடுகின்றனர்.
இரண்டு குறள்வெண்பாக்களை அடுத்தடுத்து நிறுத்தித் தனிச்சொல் கொண்டு இணைக்கும் போது, முதற்குறட்பாவுடன் தனிச் சொல்லுக்குத் தளைப் பொருத்தம் ஏற்படவில்லையென்றால் வெண்பாவின் ஓசை கெடும். இதனைச் சரிசெய்ய முதற்குறட்பாவின் இறுதியில் ஓர் அசையோ, இரண்டசையோ சேர்த்து வெண்டளை அமையுமாறு செய்யப்படும். இவ்வாறு ஓசை பிறழாமைக்காகச் சேர்க்கப்படும் இணைப்பு அசைகளுக்கு ‘ஆசு’ என்று பெயர். ஆசு இடையிலே சேர்க்கப்பட்டு வரும் நேரிசை வெண்பா ஆசிடை நேரிசை வெண்பா எனப்படும். இது ஒருவிகற்பத்தாலோ இருவிகற்பத்தாலோ வரும்.
வஞ்சியேன் என்றவன்றன் ஊர்உரைத்தான் யானுமவன் வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் – வஞ்சியான் வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான் வஞ்சியாய் வஞ்சியார் கோ(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)
மேற்காட்டிய பாடலில் முதற்குறள் வெண்பாவின் இறுதிச்சீர் ‘வாய்’ (நாள்சீர்)என முடிவதே பொருத்தம். ஆனால் அச்சீர் வாய் – வஞ்சியான் எனத் தனிச்சொல்லுடன் தளைப்பொருத்தமின்றிச் செப்பலோசை கெடுகிறது. ஆகவே ‘வாய்’ என்பதுடன் நேர்ந்-தேன் எனும் இரண்டசைகள் ஆசுகளாகச் சேர்க்கப்பட்டன. இப்போது வாய்நேர்ந்தேன் – வஞ்சியான் என்பது காய்முன்நேர் என வந்து வெண்சீர் வெண்டளை அமைகிறது. வெண்பாவின் ஓசை சரிசெய்யப்படுகிறது. இவ்வாறு வருவதனால் இது ஆசிடை நேரிசை வெண்பா ஆகும். நான்கடியும் ஒரே எதுகை அமைப்பில் வருவதனால் இது ஒரு விகற்பத்தால் வந்த ஆசிடை நேரிசை வெண்பா ஆகும்.
வெண்சீர் வெண்டளையின் இலக்கணம்:
இன்னிசை வெண்பா:
வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி வருவது இன்னிசை வெண்பா எனப்படும். இது ஒரு விகற்பத்தாலும் பல விகற்பத்தாலும் வரும்
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான் மருவுமின் மாண்டார் அறம்(நான்மணிக்கடிகை, 18)
வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி வருகிறது. ஆகவே இது இன்னிசை வெண்பா. இன்று – பின்றை என ஒருவிகற்பமும், ஒருவு – மருவு என மற்றொரு விகற்பமும் பெற்றுள்ளது. ஆகவே இது பல விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா ஆகும்.
பஃறொடை வெண்பா:
பல் + தொடை = பஃறொடை. ஒரு தொடை என்பது இரண்டடிகளைக் குறிக்கும். பலதொடை = பல இரண்டடிகள். அதாவது, வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடிக்கும் அதிகமான அடிகளைப் பெற்று வருவது பஃறொடை வெண்பா ஆகும். இது ஒருவிகற்பத்தாலும், பலவிகற்பத்தாலும் வரும்.
பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில் என்னோடு நின்றார் இருவர் ; அவருள்ளும் பொன்னோடை நன்றென்றாள் நல்லளே ; பொன்னோடைக் கியானைநன் றென்றாளும் அந்நிலையள் ; யானை எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன் திருத்தார்நன் றென்றேன் தியேன் (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)
மேற்காட்டிய வெண்பா ஆறடியால் வந்த பலவிகற்பப் பஃறொடை வெண்பா ஆகும். பன்-என்-பொன், கியா, எருத்த-திருத்தார் எனப் பல விகற்பங்கள் அமைந்துள்ளமை காண்க.
நன்றி: http://www.tamilvu.org