வெண்பா

யாப்பருங்கலக்காரிகை 21ம் பாடல் பாவுக்குரிய அடியும் ஓசையும் வரையருக்கிறது. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் மருட்பா எனப் பாக்கள் ஐவகைப்படும்.

யாப்பருங்கலக்காரிகை பாடல்கள் 23 – 27, வெண்பாவுக்கு ஆன விதிகளை வரையருக்கிறது. பாக்களில் வெண்பாவின் இலக்கணம் கட்டுப்பாடுகள் அதிகம் கொண்டது, இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது.

பாக்களில், வெண்பா செப்பலோசையை உடையதாக இருக்கும்.

 • ஈற்றடி (கடைசி அடி) முச்சீரும், ஏனைய அடி நாற்சீரும் பெற்று வரும்.
 • வெண்பா குறைந்தது இரண்டு அடிகளைக் கொண்டது.
 • மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் என்பனவாகிய வெண்பாத் தளைகளையே பெற்று வரவேண்டும்.
 • ஈற்றுச் சீர் ஓரசையாலோ, ஓரசையுடன் குற்றியலுகரமோ பெற்று முடிதல் வேண்டும்

யாப்பிலக்கண நெறிகளுக்கு இணையான இடம் சாரா இலக்கணம் பின்வருமாறு:

<ஒற்று> {மெய்யெழுத்து}
<குறில்> {குறுகிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
<நெடில்> {நெடிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
<நேர்> <குறில்> | <நெடில்> | <நேர்> <ஒற்று>
<நிரை> <குறில்> <குறில்> | <குறில்> <நெடில்> | <நிரை> <ஒற்று>
<நாள்> <நேர்>
<மலர்> <நிரை>
<காசு> <நேர்> <நேர்>
<பிறப்பு> <நிரை> <நேர்>
<தேமா> <நேர்> <நேர்>
<புளிமா> <நிரை> <நேர்>
<கருவிளம்> <நிரை> <நிரை>
<கூவிளம்> <நேர்> <நிரை>
<தேமாங்காய்> <தேமா> <நேர்>
<புளிமாங்காய்> <புளிமா> <நேர்>
<கருவிளங்காய்> <கருவிளம்> <நேர்>
<கூவிளங்காய்> <கூவிளம்> <நேர்>
<ஈரசை> <தேமா> | <புளிமா> | <கருவிளம்> | <கூவிளம்>
<மூவசை> <தேமாங்காய்> | <புளிமாங்காய்> | <கூவிளங்காய்> | <கருவிளங்காய்>
<ஈற்றுச்சீர்> <நாள்> | <மலர்> | <காசு> | <பிறப்பு>
<சீர்> <ஈரசை> | <மூவசை>
<ஈற்றடி> <சீர்> <சீர்> <ஈற்றுச்சீர்>
<அடி> <சீர்> <சீர்> <சீர்> <சீர்>
<வெண்பா> <அடி>{1,11}<ஈற்றடி>

 

மேற்கண்ட இலக்கணங்கள் பொருந்த இரண்டடிகளில் வருவது – குறள்வெண்பா; மூன்றடிகளில் வருவது – சிந்தியல் வெண்பா (அடி எண்ணிக்கை குறைவாக இருப்பதால் குறள், சிந்தியல் என பெயர்ப்பெற்றது); நான்கடிகளில் வருவது – இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா (ஓசையில் உள்ள சிறு வேறுபாடுகளால் நேரிசை, இன்னிசை என பெயர்ப்பெற்றது); ஐந்தடி முதல் 12 அடி வரை அமைவது – பஃறொடை வெண்பா (பல அடிகள் தொடுத்து வருவதால் பஃறொடை என பெயர்ப்பெற்றது); 12 அடிகளுக்குமேல் பல அடிகளைப் பெற்று வருவது – கலிவெண்பா என வகைப்படுத்துவர்.

குறள் வெண்பா:

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று இரண்டடியால் வருவது குறள் வெண்பா. திருக்குறள் குறள் வெண்பாவை சார்ந்தது

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக     (திருக்குறள், 391)

இந்த வெண்பாவின் ஈற்றுச்சீர் <குறில்><குறில்> பெற்று மலர்ச்சீர் ஆகும்.

சிந்தியல் வெண்பா:

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று மூன்றடியால் வரும் வெண்பா சிந்தியல் வெண்பா எனப்படும். குறுகிய அடி எண்ணிக்கையுடைய வெண்பா குறள்வெண்பா எனப்பட்டது போலவே, அடி எண்ணிக்கையில் சிறியதாக (சிற்றியல் – சிந்தியல்) உள்ள வெண்பா சிந்தியல் வெண்பா எனப் பெயர் பெற்றது. இது ‘நேரிசைச் சிந்தியல்’ & ‘இன்னிசைச் சிந்தியல்’ என இருவகைப்படும்.

நேரிசைச் சிந்தியல் வெண்பா:

மூன்றடியாய், இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று ஒருவிகற்பத்தாலோ, இரண்டு விகற்பத்தாலோ வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா. நேரிசை வெண்பாவைப் போல இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சீர் பெறுவதால் இது இப்பெயர் பெற்றது.

அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து
செறிந்தார்க்குச் செவ்வன் உரைப்ப – செறிந்தார்
சிறந்தமை ஆராய்ந்து கொண்டு

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

மேற்காட்டிய வெண்பா மூன்றடியாய், இரண்டாமடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று ஒருவிகற்பத்தால் (அறி-செறி-சிற) வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா ஆகும்.

இன்னிசைச் சிந்தியல் வெண்பா:

மூன்றடியாய்த் தனிச்சொல் இன்றி ஒரு விகற்பத்தாலோ பலவிகற்பத்தாலோ வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஆகும். இன்னிசை வெண்பாப்போலத் தனிச்சொல் இன்றி வருவதால் இது இன்னிசைச் சிந்தியல் வெண்பா என்னும் பெயர் பெற்றது.

சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

மேற்காட்டிய வெண்பா மூன்றடியாய்த் தனிச்சொல் இன்றிப் பலவிகற்பத்தால் (சுரை – யானை, கான) வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஆகும்.

நேரிசை வெண்பா:

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடியாய், இரண்டாம் அடியின் இறுதிச்சீர் தனிச்சீராக வருவது நேரிசை வெண்பா. யாப்பருங்கலக்காரிகை ‘இருகுறள் நேரிசை வெண்பா’ & ‘ஆசிடை நேரிசை வெண்பா’ என இரண்டு வகைகளாகப் பிரிக்கிறது.

இருகுறள் நேரிசை வெண்பா:

 1. இரண்டு குறள் வெண்பாக்களை அடுத்தடுத்து நிறுத்தி, முதற் குறள்வெண்பாவின் இறுதியில் ஒரு தனிச்சொல் இட்டு, அதன் மூலம் அடியை நிரப்பி, இருகுறள் வெண்பாக்களையும் இணைப்பது இருகுறள் நேரிசை வெண்பா.
 2. அவ்வாறு இடப்பெறும் தனிச்சொல் முதற்குறள் வெண்பாவின் இறுதிச் சீருடன், அதாவது மூன்றாம் சீருடன் வெண்பாவுக்குரிய தளை (பிணைப்பு) பொருத்தம் உடையதாக இருத்தல் வேண்டும். மேலும் முதற் குறள் வெண்பாவுடன் எதுகைப் பொருத்தம் உடையதாகவும் இருத்தல் வேண்டும்.
 3. இப்பாடல் ஒரு விகற்பமாகவும் வரலாம் ; இரு விகற்பமாகவும் வரலாம். அதாவது நான்கடிகளும் ஒரே எதுகை அமைப்புப் பெற்று ஒருவிகற்பத்தால் வரலாம் ; அல்லது முன்னிரண்டடி ஓர் எதுகை அமைப்பும், பின்னிரண்டடி வேறோர் எதுகை அமைப்பும் பெற்று இருவிகற்பத்தாலும் வரலாம்.

அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே
பெரிய வரைவயிரம் கொண்டு – தெரியின்
கரிய வரைநிலையார் காய்ந்தால்என் செய்வார்
பெரிய வரைவயிரம் கொண்டு

மேற்காட்டிய பாடலில் ‘தெரியின்’ என்ற தனிச்சொல்லை நீக்கிவிட்டுப் பார்த்தா. இரண்டு குறள்வெண்பாக்கள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது தெரியும். ‘கொண்டு’ என்னும் சீர் ‘காசு’ என்னும் வாய்பாட்டையுடையது. இரு குறள் வெண்பாக்களையும் ‘தெரியின்’ என்னும் தனிச்சொல் இணைக்கின்றது. ‘கொண்டு – தெரியின்’ என முதற்குறள் வெண்பாவுடன் தளைப் பொருத்தம் (மாமுன்நிரை – இயற்சீர் வெண்டளை) அமைகிறது. அரிய – பெரிய – தெரியின் என முதற்குறள் வெண்பாவுடன் தனிச்சொல் எதுகைப் பொருத்தமும் கொண்டுள்ளது. இவ்வாறு தனிச்சொல்லால் இணைக்கப்பட்டு நான்கடியும் ஒரேவிகற்பமாக (அரிய – பெரிய – கரிய – பெரிய) வருவதால் இப்பாடல் ஒருவிகற்பத்தால் வந்த இருகுறள் நேரிசை வெண்பா ஆகும்.

இயற்சீர் வெண்டளையின் இலக்கணம்:

 • இயற்சீர் இரண்டு அசைகளை உடைய சீராக இருத்தல் வேண்டும்.
 • வருஞ்சீர், ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு அசைகளையுடைய சீர்களில் ஒன்றாக இருக்கலாம்.
 • இயற்சீரின் இறுதி அசையும், வருஞ்சீரின் முதல் அசையும் ஒரே வகையினவாக அமைதல் கூடாது.
 • வருஞ்சீரின் இறுதி அசை நேரசை எனின், வருஞ்சீரின் முதலசை நிரையசையாக இருக்கவேண்டும். முன்னது நிரையசையாக இருப்பின் பின்னையது நேரசையாக இருத்தல் வேண்டும்.

ஆசிடை நேரிசை வெண்பா:

ஆசு = பற்றாசு; பொற்கொல்லர் நகைகளில் இணைப்புக்குப் பயன்படுத்தும் பொடி. இங்குச் சீர்களைத் தளை, ஓசைப் பொருத்தத்துடன் இணைக்கப் பயன்படுத்தும் ஒன்று அல்லது இரண்டு அசைகளை ‘ஆசு’ எனக் குறிப்பிடுகின்றனர்.
இரண்டு குறள்வெண்பாக்களை அடுத்தடுத்து நிறுத்தித் தனிச்சொல் கொண்டு இணைக்கும் போது, முதற்குறட்பாவுடன் தனிச் சொல்லுக்குத் தளைப் பொருத்தம் ஏற்படவில்லையென்றால் வெண்பாவின் ஓசை கெடும். இதனைச் சரிசெய்ய முதற்குறட்பாவின் இறுதியில் ஓர் அசையோ, இரண்டசையோ சேர்த்து வெண்டளை அமையுமாறு செய்யப்படும். இவ்வாறு ஓசை பிறழாமைக்காகச் சேர்க்கப்படும் இணைப்பு அசைகளுக்கு ‘ஆசு’ என்று பெயர். ஆசு இடையிலே சேர்க்கப்பட்டு வரும் நேரிசை வெண்பா ஆசிடை நேரிசை வெண்பா எனப்படும். இது ஒருவிகற்பத்தாலோ இருவிகற்பத்தாலோ வரும்.

வஞ்சியேன் என்றவன்றன் ஊர்உரைத்தான் யானுமவன்
வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் – வஞ்சியான்
வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய் வஞ்சியார் கோ
     (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

மேற்காட்டிய பாடலில் முதற்குறள் வெண்பாவின் இறுதிச்சீர் ‘வாய்’ (நாள்சீர்)என முடிவதே பொருத்தம். ஆனால் அச்சீர் வாய் – வஞ்சியான் எனத் தனிச்சொல்லுடன் தளைப்பொருத்தமின்றிச் செப்பலோசை கெடுகிறது. ஆகவே ‘வாய்’ என்பதுடன் நேர்ந்-தேன் எனும் இரண்டசைகள் ஆசுகளாகச் சேர்க்கப்பட்டன. இப்போது வாய்நேர்ந்தேன் – வஞ்சியான் என்பது காய்முன்நேர் என வந்து வெண்சீர் வெண்டளை அமைகிறது. வெண்பாவின் ஓசை சரிசெய்யப்படுகிறது. இவ்வாறு வருவதனால் இது ஆசிடை நேரிசை வெண்பா ஆகும். நான்கடியும் ஒரே எதுகை அமைப்பில் வருவதனால் இது ஒரு விகற்பத்தால் வந்த ஆசிடை நேரிசை வெண்பா ஆகும்.

வெண்சீர் வெண்டளையின் இலக்கணம்:

 • வெண்சீர் என்பது தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் என்னும் வாய்பாடுகளைக் கொண்டு அமையும் காய்சீர்கள்.
 • காய்ச்சீர் முன் நேர்-அசை வந்து தளைவது வெண்சீர் வெண்டளை.

இன்னிசை வெண்பா:

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி வருவது இன்னிசை வெண்பா எனப்படும். இது ஒரு விகற்பத்தாலும் பல விகற்பத்தாலும் வரும்

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்
மருவுமின் மாண்டார் அறம்
.             (நான்மணிக்கடிகை, 18)

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி வருகிறது. ஆகவே இது இன்னிசை வெண்பா. இன்று – பின்றை என ஒருவிகற்பமும், ஒருவு – மருவு என மற்றொரு விகற்பமும் பெற்றுள்ளது. ஆகவே இது பல விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா ஆகும்.

பஃறொடை வெண்பா:

பல் + தொடை = பஃறொடை. ஒரு தொடை என்பது இரண்டடிகளைக் குறிக்கும். பலதொடை = பல இரண்டடிகள். அதாவது, வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடிக்கும் அதிகமான அடிகளைப் பெற்று வருவது பஃறொடை வெண்பா ஆகும். இது ஒருவிகற்பத்தாலும், பலவிகற்பத்தாலும் வரும்.

பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில்
என்னோடு நின்றார் இருவர் ; அவருள்ளும்
பொன்னோடை நன்றென்றாள் நல்லளே ; பொன்னோடைக்
கியானைநன் றென்றாளும் அந்நிலையள் ; யானை
எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன்
திருத்தார்நன் றென்றேன் தியேன்
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

மேற்காட்டிய வெண்பா ஆறடியால் வந்த பலவிகற்பப் பஃறொடை வெண்பா ஆகும். பன்-என்-பொன், கியா, எருத்த-திருத்தார் எனப் பல விகற்பங்கள் அமைந்துள்ளமை காண்க.

 

நன்றி: http://www.tamilvu.org

வல்லினம் மிகும்/மிகா இடங்கள்

இ ஈ ஐ வழி ய உம் ஏனை
உயிர் வழி வ உம் ஏ முன் இவ் இருமை உம்
உயிர் வரின் உடம்படுமெய் என்று ஆகும்
– நன்னூல் 162
என்ற விதியின் படி

 • நிலைமொழியில் இ, ஈ, ஐ வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய்) உடம்படுமெய் தோன்றும்.
 • பிற உயிர்கள் இருப்பின் (வ்) உடம்படுமெய் தோன்றும்.
 • ஏ இருப்பின் ய் / வ் ஆகிய இரண்டு உடம்படுமெய்களும் தோன்றும்.

ய ர ழ முன்னர் மொழி முதல் மெய் வரும்
– நன்னூல் 116
என்ற விதியின் படி

 • ய, ர, ழ என்னும் மூன்று மெய்களின் முன் மொழிக்கு முதலாக நின்ற பத்து மெய்களும் மயங்கும்.
மொழிக்கு முதலாக நின்ற பத்து மெய்கள்


சுட்டு மற்றும் வினா அடியாகத் தோன்றிய சொற்கள் முன்

அ, இ என்பது சுட்டு எழுத்துகள்; எ, யா என்பது வினா எழுத்துகள். இவற்றின் முன்னும், இவற்றின் அடியாகத் தோன்றிய அந்த, இந்த, எந்த; அங்கு, இங்கு, எங்கு; ஆங்கு, ஈங்கு, யாங்கு; அப்படி, இப்படி, எப்படி; ஆண்டு, ஈண்டு, யாண்டு; அவ்வகை, இவ்வகை, எவ்வகை, அத்துணை, இத்துணை, எத்துணை என்னும் சொற்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

 • அங்கு + கண்டான் = அங்குக் கண்டான்
 • யாண்டு + காண்பேன் = யாண்டுக் காண்பேன்
 • எத்துணை + பெரியது = எத்துணைப் பெரியது


அது, இது, எது; அவை, இவை, எவை; அன்று, இன்று, என்று, அத்தனை, இத்தனை, எத்தனை; அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு ; அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு என்னும் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகாது.
எடுத்துக்காட்டு:

 • அன்று + பார்த்தான் = அன்று பார்த்தான்
 • எத்தனை + பழங்கள் = எத்தனை பழங்கள்?
 • அவ்வாறு + பேசினான் = அவ்வாறு பேசினான்

வந்த, கண்ட, சொன்ன, வரும் என்பன போன்ற பெயரெச்சங்களோடு படி, ஆறு என்னும் சொற்கள் சேர்ந்து வரும் வினையெச்சச் சொற்களின் முன்வரும் வல்லினம் மிகாது.

எடுத்துக்காட்டு:

 • வரும்படி + கூறினான் = வரும்படி கூறினான்
 • கண்டவாறு + சொன்னான் = கண்டவாறு சொன்னான்
 • சொன்னபடி + செய்தான் = சொன்னபடி செய்தான்

ஓர் எழுத்துச் சொற்களின் முன்

கை, தீ, தை, பூ, மை என்னும் ஓர் எழுத்துச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

 • கை + குழந்தை = கைக்குழந்தை
 • தீ + பெட்டி = தீப்பெட்டி
 • தை + திருநாள் = தைத்திருநாள்
 • பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்

எண்ணுப்பெயர்கள், எண்ணுப்பெயரடைகள் முன்

ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களில் எட்டு, பத்து ஆகியன வன்தொடர்க் குற்றியலுகரங்கள். இவற்றின் முன்வரும் வல்லினம் மிகுவதை நாம் கீழே காண்போம். ஏனைய ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்னும் மென்தொடர்க் குற்றியலுகர எண்ணுப்பெயர்களின் முன்னும், ஆறு, நூறு என்னும் நெடில் தொடர்க் குற்றியலுகர எண்ணுப்பெயர்களின் முன்னும், ஏழு என்னும் முற்றியலுகர எண்ணுப்பெயரின் முன்னும், ஒன்பது என்னும் உயிர்த்தொடர்க் குற்றியலுகர எண்ணுப்பெயரின் முன்னும் வரும் வல்லினம் மிகாது.

எடுத்துக்காட்டு:

 • ஒன்று + போதும் = ஒன்று போதும்
 • ஐந்து + சிறுவர்கள் = ஐந்து சிறுவர்கள்
 • நூறு + பழங்கள் = நூறு பழங்கள்

ஒரு, இரு, அறு, எழு என்னும் எண்ணுப்பெயரடைகளின் முன்வரும் வல்லினம் மிகாது.

எடுத்துக்காட்டு:

 • ஒரு + பொருள் = ஒருபொருள்
 • அறு + படைவீடு = அறுபடைவீடு
 • எழு + கடல் = எழுகடல்

குற்றியலுகரச் சொற்கள் முன்

வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன்னும், சில மென்தொடர் மற்றும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன்னும், உயிர்த்தொடர் போன்ற அமைப்பை உடைய சில முற்றியலுகரச் சொற்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.

வன்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகும்

வன்தொடர்க் குற்றியலுகரம்

எடுத்துக்காட்டு:

 • எட்டு + தொகை = எட்டுத்தொகை
 • பத்து + பாட்டு = பத்துப்பாட்டு

சில மென்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகும்

மென்தொடர்க் குற்றியலுகரம்

எடுத்துக்காட்டு:

 • பாம்பு + தோல் = பாம்புத்தோல்
 • கன்று + குட்டி = கன்றுக்குட்டி


இவற்றை வல்லினம் மிகாமல் பாம்பு தோல், கன்று குட்டி என்று எழுதினால் பாம்பும் தோலும், கன்றும் குட்டியும் என்று பொருள்பட்டு உம்மைத் தொகைகள் ஆகிவிடும்.

சில உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகும்

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

எடுத்துக்காட்டு:

 • படகு + போட்டி = படகுப்போட்டி
 • மரபு + கவிதை = மரபுக்கவிதை

முற்றியலுகரச் சொற்கள் முன்

தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின மெய்யின் மேலும், பிற மெய்களின் மேலும் ஏறிவருகின்ற உகரம் முற்றியலுகரம் எனப்படும். நடு, புது, பொது, பசு, திரு, தெரு, முழு, விழு என்னும் முற்றியலுகரச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

 • பசு + தோல் = பசுத்தோல்
 • முழு + பேச்சு = முழுப்பேச்சு

தனி நெட்டெழுத்தை அடுத்தோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ ஒரு சொல்லின் இறுதியில் வல்லினமெய் அல்லாத பிற மெய்களின் மேல் ஏறி வருகின்ற உகரமும் முற்றியலுகரம் ஆகும். இத்தகைய முற்றியலுகரச் சொற்கள் பெரும்பாலும் ‘வு’ என முடியும். இவற்றின் முன் வரும் வல்லினமும் மிகும்.

எடுத்துக்காட்டு:

 • உழவு + தொழில் = உழவுத்தொழில்
 • பதிவு + தபால் = பதிவுத்தபால்

வேற்றுமைப் புணர்ச்சியில்

வேற்றுமைப் புணர்ச்சி

ஒரு பெயர் பல்வேறு பொருளைத் தருவதாக மாறுவதற்குக் காரணம் அப்பெயருடன் சேரும் ஐ, ஓடு முதலிய உருபுகள் ஆகும். இவ்வுருபுகள் பெயரை வேறுபடுத்துவதால் ‘வேற்றுமை உருபுகள்’ எனப்படுகின்றன.
எடுத்துக்காட்டு:

  • கம்பன் பாடினான்.
  • கம்பனைப் பாடினான்.
  • கம்பனோடு பாடினான்.

வேற்றுமை உருபுகள்:

 1. முதல் வேற்றுமை உருபு = இல்லை (எழுவாய் வேற்றுமை)
 2. இரண்டாம் வேற்றுமை – ஐ
 3. மூன்றாம் வேற்றுமை – ஆல், ஆன், ஒடு, ஓடு
 4. நான்காம் வேற்றுமை – கு
 5. ஐந்தாம் வேற்றுமை – இன், இல்
 6. ஆறாம் வேற்றுமை – அது, ஆது
 7. ஏழாம் வேற்றுமை – கண் (ஏழாம் வேற்றுமை உருபுகள் கண் முதலாக இருபத்தெட்டும் பிறவும் ஆகும்.)
 8. எட்டாம் வேற்றுமை உருபு = இல்லை(விளி வேற்றுமை)

எட்டு வேற்றுமைகளில் முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைகளுக்கு உருபு இல்லை வேற்றுமை ஆதலால் உருபுகள் 6 அகும்.

இரண்டு சொற்களுக்கிடையே இவ்வுருபுகள் மறைந்து(தொக்கி) வந்தால் அது ‘வேற்றுமைத்தொகை’ எனப்படும்.


இரண்டாம் வேற்றுமை (ஐ) முன் வரும் வல்லினம் மிகும்

எடுத்துக்காட்டு:

 • பாயை + சுருட்டு = பாயைச் சுருட்டு
 • கதவை + தட்டு = கதவைத் தட்டு

நான்காம் வேற்றுமை (கு) முன்வரும் வல்லினம் மிகும்

எடுத்துக்காட்டு:

 • ஊருக்கு + போனான் = ஊருக்குப் போனான்

நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாயின் அதன்முன் வரும் வல்லினம் மிகும்

எடுத்துக்காட்டு:

 • படை + தளபதி = படைத்தளபதி (படைக்குத் தளபதி)
 • கூலி + படை = கூலிப்படை (கூலிக்குப் படை)

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்

எடுத்துக்காட்டு:

 • நகை + கடை = நகைக்கடை (நகையை விற்கும் கடை)
 • எலி + பொறி = எலிப்பொறி (எலியைப் பிடிக்கும் பொறி)


மேற்கூறிய எடுத்துக்காட்டுகளில் இரண்டாம் வேற்றுமை உருபான ஐயும் அதன் பயனும் (விற்கும்/பிடிக்கும்) உடன்தொக்கி (சேர்ந்து மறைந்து) வரும் இடங்களில் வல்லினம் மிகும்.

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்

எடுத்துக்காட்டு:

 • இரும்பு + பெட்டி = இரும்புப் பெட்டி (இரும்பினால் ஆகிய பெட்டி)
 • தேங்காய் + சட்னி = தேங்காய்ச் சட்னி (தேங்காயால் ஆன சட்னி)

நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் பெரும்பாலும் மிகும்

எடுத்துக்காட்டு:

 • கோழி + தீவனம் = கோழித் தீவனம் (கோழிக்கு உரிய தீவனம்)

ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்

எடுத்துக்காட்டு:

 • மலை + பாம்பு = மலைப்பாம்பு (மலையில் உள்ள பாம்பு)

ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாய் இருப்பின், அதன் முன்னர் வரும் வல்லினம் மிகும்

எடுத்துக்காட்டு:

 • கிளி + கூண்டு = கிளிக்கூண்டு (கிளியின் அது கூண்டு)

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது

எடுத்துக்காட்டு:

 • தமிழ் + படித்தான் = தமிழ் படித்தான் (தமிழைப் படித்தான்)
 • நீர் + பருகினான் = நீர் பருகினான் (நீரைப் பருகினான்)

நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் அதன்முன் வரும் வல்லினம் மிகாது

எடுத்துக்காட்டு:

 • பொன்னி + கணவன் = பொன்னி கணவன் (பொன்னிக்குக் கணவன்

ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாக இருப்பின் அதன்முன் வரும் வல்லினம் மிகாது

எடுத்துக்காட்டு:

 • கண்ணகி + சிலம்பு = கண்ணகி சிலம்பு
 • மகளிர் + கல்லூரி = மகளிர் கல்லூரி

மூன்றாம் வேற்றுமையான ஒடு & ஓடு என உயிர் ஈறு கொண்டவை. இவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது

எடுத்துக்காட்டு:

 • கண்ணகி + சிலம்பு = கண்ணகி சிலம்பு
 • மகளிர் + கல்லூரி = மகளிர் கல்லூரி

‘கொண்டு’ என்னும் சொல்லுருபும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய கருவிப் பொருளில் வழங்குகிறது. இதன் முன் வரும் வல்லினமும் மிகாது

எடுத்துக்காட்டு:

 • கத்தி கொண்டு + குத்தினான் = கத்திகொண்டு குத்தினான் (கத்தியால் குத்தினான்)

ஐந்தாம் வேற்றுமைக்கு உரிய இல் என்பதோடு இருந்து என்னும் சொல்லுருபும், இன் என்பதோடு நின்று என்னும் சொல்லுருபும் சேர்ந்தே நீக்கப் பொருளை உணர்த்துகின்றன. இவ்விரு உருபுகளின் முன்வரும் வல்லினமும் மிகாது

எடுத்துக்காட்டு:

 • வீட்டிலிருந்து + சென்றான் = வீட்டிலிருந்து சென்றான்

ஆறாம் வேற்றுமைக்கு உரிய அது என்னும் உருபின் முன் வரும் வல்லினம் மிகாது

எடுத்துக்காட்டு:

 • எனது + புத்தகம் = எனது புத்தகம்

‘உடைய’ என்னும் சொல்லுருபும், ஆறாம் வேற்றுமைக்கு உரிய உடைமைப் பொருளில் வழங்குகிறது. இதன் முன் வரும் வல்லினமும் மிகாது

எடுத்துக்காட்டு:

 • என்னுடைய + புத்தகம் = என்னுடைய புத்தகம்

அல்வழிப் புணர்ச்சியில்

அல்வழிப் புணர்ச்சி

ஒரு சொற்றொடரில் வேற்றுமை அல்லாத பொருளில் சொற்கள் புணர்வது அல்வழிப் புணர்ச்சி எனப்படும்.

அல்வழிப் புணர்ச்சி பதினான்கு வகைப்படும்:

 • வினைத்தொகை – கொல்யானை
 • பண்புத்தொகை – செந்தமிழ்
 • உவமைத்தொகை – தாமரைமுகம்
 • உம்மைத்தொகை – இராப்பகல்
 • அன்மொழித்தொகை – பொற்றொடி (வந்தாள்)
 • எழுவாய்த்தொடர் – ஆசிரியர் வந்தார்
 • விளித்தொடர் – நண்பா வா
 • பெயரெச்சத்தொடர் – வந்த மனிதர்
 • வினையெச்சத்தொடர் – வந்து சேர்ந்தார்
 • தெரிநிலை வினைமுற்றுத்தொடர் – உறவினர் வந்தனர்
 • குறிப்பு வினைமுற்றுத் தொடர் – நண்பர் நல்லவர்
 • இடைச்சொற்றொடர் – மற்றொன்று
 • உரிச்சொற்றொடர் – மாநகர்
 • அடுக்குத்தொடர் – உண்மை உண்மை
 • பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்

  எடுத்துக்காட்டு:

  • மெய் + பொருள் = மெய்ப்பொருள்
  • புது + துணி = புதுத்துணி

  இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்

  எடுத்துக்காட்டு:

  • மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள்
  • உழவு + தொழில் = உழவுத்தொழில்

  உவமைத் தொகையில் வரும் வல்லினம் மிகும்

  எடுத்துக்காட்டு:

  • மலர் + கண் = மலர்க்கண் (மலர் போன்ற கண்)

  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்

  எடுத்துக்காட்டு:

  • செல்லா + காசு = செல்லாக் காசு (செல்லாத காசு)

  அகர ஈற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகும்

  எடுத்துக்காட்டு:

  • வர + சொன்னான் = வரச் சொன்னான்

  இகர ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகும்

  எடுத்துக்காட்டு:

  • தேடி + பார்த்தான் = தேடிப் பார்த்தான்

  யகர மெய் ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகும்

  எடுத்துக்காட்டு:

  • போய் + பார்த்தான் = போய்ப் பார்த்தான்

  வன்தொடர்க் குற்றியலுகர ஈற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகும்

  எடுத்துக்காட்டு:

  • எடுத்து + தந்தான் = எடுத்துத் தந்தான்

  ஆக, ஆய், என என்று முடியும் வினையெச்சங்களின் முன் வல்லினம் மிகும்

  எடுத்துக்காட்டு:

  • தருவதாக + சொன்னான் = தருவதாகச் சொன்னான்
  • வருவதாய் + கூறினார் = வருவதாய்க் கூறினார்

  குறிப்புவினையெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகும்

  எடுத்துக்காட்டு:

  • மெல்லென + சிரித்தாள் = மெல்லெனச் சிரித்தாள்
  • இனிக்க + பேசுவான் = இனிக்கப் பேசுவான்

  மகர இறுதி கெட்டு, உயிர் ஈறாய் நிற்கும் சொற்கள் முன்வரும் வல்லினம் மிகும்

  எடுத்துக்காட்டு:

  • மெல்லென + சிரித்தாள் = மெல்லெனச் சிரித்தாள்
  • இனிக்க + பேசுவான் = இனிக்கப் பேசுவான்

  வினைத்தொகையில் வரும் வல்லினம் கட்டாயம் மிகாது
  வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும் எனப் பார்த்தோம். ஆனால் வினைத்தொகையில் மட்டும் நிலைமொழி வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தாலும் வல்லினம் மிகாது.

  எடுத்துக்காட்டு:

  • சுடு + சோறு = சுடுசோறு
  • விடு + கதை = விடுகதை

  உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது

  எடுத்துக்காட்டு:

  • இட்லி + தோசை = இட்லி தோசை (இட்லியும் தோசையும்)
  • இரவு + பகல் = இரவு பகல் (இரவும் பகலும்)

  எழுவாய்த் தொடரில் வரும் வல்லினம் மிகாது

  எடுத்துக்காட்டு:

  • கோழி + கூவியது = கோழி கூவியது
  • யானை + பிளிறியது = யானை பிளிறியது

  விளித்தொடரில் வரும் வல்லினம் மிகாது

  எடுத்துக்காட்டு:

  • மகனே + கேள் = மகனே கேள்
  • அரசே + பார் = அரசே பார்

  ஏவல் வினைமுற்று முன் வரும் வல்லினம் மிகாது

  எடுத்துக்காட்டு:

  • புறப்படு + பள்ளிக்கு = புறப்படு பள்ளிக்கு
  • படி + பாடத்தை = படி பாடத்தை

  வியங்கோள் வினைமுற்று முன் வரும் வல்லினம் மிகாது

  எடுத்துக்காட்டு:

  • வருக + புலவரே = வருக புலவரே
  • வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்

  தெரிநிலைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகாது

  எடுத்துக்காட்டு:

  • ஓடிய + குதிரை = ஓடிய குதிரை
  • பாடிய + பாட்டு = பாடிய பாட்டு

  குறிப்புப் பெயரெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகாது

  எடுத்துக்காட்டு:

  • அரிய + பொருள் = அரிய பொருள்
  • நல்ல + பையன் = நல்ல பையன்

  எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகாது

  எடுத்துக்காட்டு:

  • செல்லாத + காசு = செல்லாத காசு
  • காணாத + கண்கள் = காணாத கண்கள்

  ண்டு, ந்து, ன்று என முடியும் மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சங்களுக்கு முன் வரும் வல்லினம் மிகாது

  எடுத்துக்காட்டு:

  • கண்டு + பேசினார் = கண்டு பேசினார்
  • வந்து + சென்றான் = வந்து சென்றான்
  • கொன்று + குவித்தான் = கொன்று குவித்தான்

  ய்து என முடியும் இடைத்தொடர்க் குற்றியலுகர வினையெச்சங்களுக்கு முன்னும் வரும் வல்லினம் மிகாது

  எடுத்துக்காட்டு:

  • செய்து + தந்தான் = செய்து தந்தான்

  உகர ஈற்றுக் குறிப்பு வினையெச்சங்களுக்கு முன் வரும் வல்லினம் மிகாது

  எடுத்துக்காட்டு:

  • நன்கு + பேசினான் = நன்கு பேசினான்

  ஆ, ஓ என்னும் வினா எழுத்துகளை இறுதியிலே கொண்டு முடியும் சொற்களுக்கு முன்னர் வரும் வல்லினம் மிகாது

  எடுத்துக்காட்டு:

  • அவனா + தந்தான் = அவனா தந்தான்?

  பல, சில என்னும் சொற்களின் முன்வரும் வல்லினம் மிகாது

  எடுத்துக்காட்டு:

  • பல + பொருள் = பலபொருள்
  • சில + பூச்சிகள் = சிலபூச்சிகள்

  இரு வடமொழிச் சொற்கள் சேர்ந்து வரும் தொடர்களில் வரும் வல்லினம் மிகாது

  எடுத்துக்காட்டு:

  • ஆதி + பகவன் = ஆதிபகவன்
  • தேச + பக்தி = தேச பக்தி

  வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன் கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதியும், தல் என்னும் தொழிற்பெயர் விகுதியும் வந்தால் வல்லினம் மிகாது

  எடுத்துக்காட்டு:

  • வாக்கு + கள் = வாக்குகள்
  • வாழ்த்து + தல் = வாழ்த்துதல்

  மேலும் சில வல்லினம் மிகும் எடுத்துக்காட்டுகள்

  • ஒற்றைக்கை
  • இரட்டைக் குழந்தைகள்
  • மற்றப் பிள்ளைகள்
  • பயிற்சிப் பள்ளி
  • நகரவைத் தலைவர்

  அகநானூறு – 355

   

  பாடல் – 355

  மாவும் வண்தளிர் ஈன்றன குயிலும்
  இன்தீம் பல்குரல் கொம்பர் நுவலும்
  மூதிலை ஒழித்த போதுஅவிழ் பெருஞ்சினை
  வல்லோன் தைவரும் வள்ளுயிர்ப் பாலை
  நரம்புஆர்த் தன்ன வண்டினம் முரலும்
  துணிகயம் துன்னிய தூமணல் எக்கர்த்
  தாதுஉகு தண்பொழில் அல்கிக் காதலர்
  செழுமனை மறக்கும் செவ்விவேனில்
  தானே வந்தன்று ஆயின் ஆனாது
  இலங்குவளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப்
  புலந்தனம் வருகம் சென்மோ- தோழி!
  யாமே எமியம் ஆக நீயே
  பொன்நயந்து அருள்இலை யாகி
  இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே.

  உரை|Explanation:

  மாமரம் நல்ல வலிமை மிக்க துளிர் விட்டுள்ளது,
  குயில் மரக்கிளையின் மேல் இனிமையாக பாடிக்கொண்டிருக்கிறது,
  மரங்கள் முதிர்ந்த இலைகளை உதிர்த்து, அதன் பெரிய கிளைகளில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன,
  திறமையான ஒருவர் பாலை நிலத்தின் நரம்புக் கருவியை மீட்பது போல தேனிக்கள் மென்மையாக ரீங்கரிக்கிறது,
  இந்த வெயில் காலத்தில், காதலர்கள் தங்கள் வசதியான வீட்டை மறந்து, தெளிவான நீரோடை அருகில் மணல் குன்று மற்றும் பூக்களின் மகரந்தம் ததும்பும் சோலையில் தங்கிவிடுவர்.

  தோழியே, உன்னுடைய கைகளிலிருந்து நழுவும் மின்னும் வளையலை காண்பித்து தலைவனிடம் சொல், உன்னுடைய அன்பு இல்லாத பேராசையினால் நாம் இங்கு தனியாக இருக்கிறோம்; இது உனக்கு பொருத்தமானதா?.

  Mango trees have produced strong sprouts,
  Cuckoo is singing sweetly sitting on the tree branches,
  Trees drops its autumn leaves and it’s big branches blossoming with flowers.
  Bees are humming gently like a tune played on string instrument from desert(Pālai) land by a skilled musician,
  In this summer, lovers will forget their affluent home and stay in the garden which are blooming with flowers which also contains sand dunes near the pond with clear water.

  My dear friend, show your hand where the shining bangles slide down on its own to him and tell that, “Because of your greediness and desire for wealth we are alone here. Is this fitting of you?”.

  சொல்லும் – பொருளும்:

  மாவும் – மா மரம் | Mango Tree
  வன்தளிர் (வன்மை + தளிர்) – வலிமை மிக்க துளிர் | Strong sprout
  இன் – பெரும்பாலும் இனிமையை குறிக்கும் பெயர் உரிச்சொல்லாகவரும் | Sweet or pleasant (Always in compound)
  தீம் – இனிமையான | Sweet
  குரல் – இசை/சத்தம்/ஓசை | Music/Sound
  கொம்பர் – மரக்கிளை | Tree branch
  நுவல் – சொல்லுதல் | Saying
  மூதிலை (முதுமை + இலை) – வயது முதிர்ந்த இலை | Old leaves
  அவிழ் – மலர்தல் | flowering
  சினைத்தல் – பூ அரும்புதல். | Flower blooming
  வல்லோன் – நிபுணத்துவம் உடையவன் | Expert
  நரம்பு – நரம்புக்கருவி, யாழ்முதலியன | String instruments
  ஆர் – ஒலிக்க | Play sound
  முரலும் – மெல்லிய ஒலி ஒலிக்கும் | Plays soft sound
  துணி – தெளிவு | Clear
  கயம் – ஊற்று / குளம் | Spring/Pond
  துன்னு – நெருங்க | Get close by
  எக்கர் – மணற்குன்று | Sand dune
  தண்பொழில் – குளிர்ச்சியான சோலை/பூந்தோட்டம் | Pleasant garden
  அல்கி – தங்கி | Stay
  செழுமனை (செழுமை + மனை) – செழுமையான வீடு | Affluent House
  செவ்விவேனில் – வெயில் காலம் | Summer
  இலங்குவளை – மின்னும் வளையல் | Shining Bangles
  நெகிழ்ந்த – விலகல்/வெளியேறுதல்/நீங்குதல் | Parting/Going away
  எவ்வம் – துன்பம் | Sad/Sorrow
  புலந்தனம் – வெறுத்தல் | Hate
  சென்மோ – நாம் செல்லக்கடவோம் | Let’s go
  எமியம் – தனிமையாக | Alone/Lonely
  நயந்து – ஆசைப்படுதல் | Desire
  அருள் இலையாகி – உலோபத்தனம் | Miserliness
  ஒத்தன்றால் – ஒத்துபோவது அல்ல | Not matching
   

  ஆத்திசூடி – உயிர் வருக்கம்

  ஆத்திசூடியை எழுதியது ஔவையார். ஔவையார் என்ற பெயருடன் பல பெண் புலவர்கள் தமிழ் இலக்கிய காலக்கட்டத்தில் இருந்தனர். ஆத்திசூடியை எழுதிய ஔவையார், சோழர் காலத்தில் (12-ஆம் நூற்றாண்டு) வாழ்ந்தவராவர்.

  Aathichoodi was written by Avvaiyar. There were many lady poets with the name Avvaiyar during Tamil Literature period. Avvaiyar who wrote Aathichoodi lived during Chozha period that was around 12th century.

  ஔவையார் என்பது ஔவை + ஆர். “ஒளவை” என்பது வயதில் மூத்தவர் அல்லது தவப்பெண் என்று பொருளாகும். சிலசமயங்களில் அறிவில் முதிர்ச்சி அடைந்த பெண் என்பதை குறிக்கவும் பயன்படுத்தி இருக்கலாம். “ஆர்” என்பது மரியாதை நிமித்தமான விகுதி (பெயர்ப்பகுபத விகுதி).

  Avvaiyar is the combination of Avvai + Aar. “Avvai” meant old lady or celibate lady. Later it might also had been used to mean intellectually matured lady. “Aar” is a respectable suffix given to important people or in plural forms.

  ஔவை + ஆர் புணர்ச்சி விதியை இப்போது காண்போம்.

  • உடம்படுமெய் விதிப்படி – நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்து வருமாயின் அவ்விரண்டு உயிர்களையும் இணைத்திட (உடம்படுத்த) மெய்யெழுத்துகள் ய், வ் என்றிரண்டும் பயன்படும்.
   ஔவை(வ்+ஐ) + ஆர்
  • நன்னூல் விதி – இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும். ஏ முன் இவ்விருமையும் உடம்படு மெய் என்றாகும்.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – நிலைமொழியின் இறுதியில் நிற்கும் மெய்யின்மேல், வருமொழியின் முதலில் உள்ள உயிர் வந்து கூடி உயிர்மெய் எழுத்தாக இயல்பாக புணரும்.

  இந்த விதிகளின்படி ஔவை + ஆர் ==> ஔவை + ய் + ஆர் ==> ஔவை + யார் ==> ஔவையார் என்றானது.
  றம் செய விரும்பு

  தருமம்/(கடமை) செய்ய ஆவலாக இருக்கவேண்டும்.
  Be interested in giving alms or doing your duty.

  பொருள்/Meaning:
  அறம் – தருமம் / கடமை; charity, alms or duty.

  றுவது சினம்

  கோபம் காலப்போக்கில் தணிந்து விடும்.
  Anger will get diminished gradually.

  பொருள்/Meaning:
  சினம் – கோபம்; Anger.

  யல்வது கரவேல்

  தன்னால் கொடுக்க முடிந்தவற்றை யாசிப்பவர்களுக்கு மறைக்காமல் கொடுங்கள்.
  Aid the needy people as much as possible without hiding your capacity.

  பொருள்/Meaning:
  கர – மறைத்தல்; to hide.
  கரவேல்– மறைக்காதீர்; don’t hide/conceal.

  வது விலக்கேல்

  ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் தானத்தை தடுக்காதீர்.
  Don’t prevent others from aiding others.

  பொருள்/Meaning:
  ஈவது – தானம் கொடுப்பது; Charity.

  டையது விளம்பேல்

  உன்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி மற்றவர் அறியும்படி பேசாதீர்.
  Don’t boast about your possession to others..

  பொருள்/Meaning:
  விளம்பேல் – வெளிப் படக் கூறுதல்; Boasting.

  க்கமது கைவிடேல்

  எப்போதும் முயற்சியைக் கைவிடாதீர்.
  Never give up the motivation and keep trying..

  பொருள்/Meaning:
  ஊக்கமது – முயற்சி/உயர்ச்சி; Motivation/Enthusiasm.

  ண் எழுத்து இகழேல்

  எண் (கணிதம்) மற்றும் எழுத்து (மொழி) ஆகியவற்றை இகழ்ச்சி செய்யாது கற்பீர்.
  Don’t degrade learning numbers and language.

  பொருள்/Meaning:
  இகழேல் – இகழ்ச்சி செய்யாதீர்; Degrade.

  ற்பது இகழ்ச்சி

  யாசகம் பெற்று வாழ்வது இழிவானது.
  Living by getting alms is shameful.

  பொருள்/Meaning:
  ஏற்பது – யாசகம் பெறுவது; Getting alms.

  யமிட்டு உண்

  பிச்சை கேட்பவர்களுக்கு கொடுத்துவிட்டு பிறகு சாப்பிடு.
  Eat after giving food to people who begs you.

  பொருள்/Meaning:
  ஐயம் – பிச்சை; Begging.

  ப்புர வொழுகு

  உலக வழக்கங்கள் அறிந்து அதற்கு ஏற்ப நடந்துகொள்வீர்.
  Understand the custom & duties in the society and live accordingly.

  பொருள்/Meaning:
  ஒப்புரவு – உலகாசாரம்; Custom/Duties.

  துவது ஒழியேல்

  அறிவை வழர்க்கும் நல்ல நூல்களை படிப்பதை நிறுத்தாதீர்.
  Never stop studying/learning.

  பொருள்/Meaning:
  ஓதுவது – கற்பது; Reading/Studying

  ஒளவியம் பேசேல்

  பொறமை எண்ணத்துடன் எவரிடமும் பேசாதீர்.
  Don’t gossip or speak jealously.

  பொருள்/Meaning:
  ஒளவியம் – பொறாமை; Jealousy.

  கஞ் சுருக்கேல்

  அதிக இலாப்பத்துக்காக தானிய அளவைக் குறைத்து விற்காதீர்
  Don’t reduce the quantity of grains while selling to gain more profits.

  பொருள்/Meaning:
  அஃகம் – தானியம்; Grains.